- அபூ முஹம்மத் அல்முஹம்மதி -
- 0094 7 1 8 3 0 8 2 0 8 -
- 0094 7 1 8 3 0 8 2 0 8 -
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
(யாவற்றையும் படைத்த அல்லாஹ்) வானத்திலிருந்து நீரை இறக்கினான். பின்னர் (அதிலிருந்து) ஓடைகள் அவற்றின் அளவுகளில் தோன்றியது. (அதன்) பின்னர் மேலெழுந்த நுரைகளை வெள்ளம் சுமந்து சென்றது. ஆபரணங்களை அல்லது பிரயோசனம் தரும் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நெருப்பிலே உருக்கக் கூடியவற்றிலிருந்தும் அதேபோன்ற நுரை ஏற்படுகின்றது. சத்தியத் திற்கும் அசத்தியத்திற்கும் இவ்வாறுதான் அல்லாஹ் உதாரணம் காட்டுகின்றான். (மேலே எழுந்த அழுக்கு) நுரையைப் பொருத்தமட்டில் (அது) புறக்கணிக்கப்பட்டு விடுகின்றது. மனிதர்களுக்குப் பிரயோசனம் அளிக்கக் கூடியதே பூமியில் தேங்கி நிற்கின்றது. இவ்வாறுதான் அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகின்றான்.
( 1 3 : 1 7 )
சத்தியத்தின் தன்மைகளையும், அசத்தியத்தின் தன்மை களையும் தெளிவுபடுத்துவதற்கு அல்லாஹ் மிக மிக அழகான இரண்டு உதாரணங்களை இந்த வசனத்தில் கூறியுள்ளான். இதனைக்கூட ஒரு மனிதன் புரிந்துகொள்ளவில்லை என்றால் அவன் மனிதன் எனக் கூறப்படுவதற்கே அருகதை அற்றவனாக ஆகி விடுவான். மனிதனை அல்லாஹ் குறைந்த பட்சம் அவனுக்குக் கூறப்படும் சத்தியத்தை விளங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுத் துள்ளான். சத்தியத்தை விளங்குவதில் எந்த சிரமமும் இல்லாமல் இருக்க உதாரணங்கள் கூறுவது அல்லாஹ்வின் வழிமுறையாகும்.
அல்லாஹ் இங்கு கூறியுள்ள உதாரணத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய ஒரு கோணம் உள்ளது. அதேநேரம் இதுவரை இஸ்லாம் எனும் நேர்வழி கிடைக்கப்பெறாதவர்கள் சிந்திக்க வேண்டிய ஒரு கோணமும் உள்ளது. இந்த உதாரணத்திலிருந்து முஸ்லிம்கள் பெறவேண்டிய படிப்பினையை முதலில் இங்கு விபரிக்கின்றேன்.
அல்லாஹ் இங்கு கூறியிருக்கும் உதாரணத்திலிருந்து முழுமையான பிரயோசனத்தை நீங்கள் அடைவதாக இருந்தால் முதலில் அந்த உதாரணத்தை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். வானத்திலிருந்து இறங்குகின்ற நீர் பூமியை வந்தடைந்ததும் அந்த நீரிலிருந்து மக்கள் பெறவேண்டிய பிரயோசகத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான அத்தனை வழிவகைகளையும் அந்தப் பூமி செய்கின்றது என்பது பற்றி எற்hவது நீங்கள் சிந்தித்தீர்களா? முதலிலே அந்த நீரைச் சந்திக்கும் பூமியின் ஒவ்வொரு பாகமும் அந்த நீரிலிருந்து தனக்குரிய பங்கை எடுத்து தன்னை வளப்படுத்திக் கொள்கின்றது. உயிரே இல்லாதிருந்த பூமி உயிர் பெற்றுவிடுகின்றது.
............வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனைக்கொண்டு பூமியை அதனது மரணத்தின் பின்னர் உயிர்ப்பித்ததில் (சிந்தித்து உணர்பவர்களுக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் உள்ளன.)
( 0 2 : 1 6 4 )
அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கிய நீரிலிருந்து பூமியின் ஒவ்வொரு பகுதியும் அது பெற்றுக்கொள்ளும் பிரயோசனத்தின் அளவைப்பொறுத்து அதிலிருந்து வெளிப்படும் விளைச்சலும் காணப்டுகின்றது. அதிக பிரயோசனம் பெற்றுக்கொண்ட பகுதி அதிகமான நன்மைகளைத் தருவதை நாம் காணலாம். இவ்வாறு வானத்திலிருந்து இறக்கப்பட்ட நீரைக்கொண்டு பூமி தன்னை வளப்படுத்தி, பிறருக்கு நன்மையளிப்பதுபோல் ஒவ்வொரு முஸ்லிமும் வானத்திலிருந்து இறக்கப்பட்ட வஹியைக்கொண்டு தன்னை வளப் படுத்திக்கொள்வதன் முலம் பிறருக்கும் நன்மையளிக்க வேண்டும். மனிதனைப் புனிதனாக மாற்றுவதற்கு வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கிய வஹி மிகச்சிறந்த பயிற்சியாகும். ஆனால் அல்லாஹ்வின் அந்த வழிகாட்டலை நாம் சரியான வடிவில் புரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நாம் தூய்மையடைவது எமது நோக்கமாக இருக்க வேண்டும். அதன் வழிகாட்டலுக்கு ஏற்ப எம்மை மாற்றிக் கொள்வது எமது வழிமுறையாக இருக்க வேண்டும்.
வானத்திலிருந்து வருகின்ற நீரிலிருந்து தனது பங்கை எடுத்துக்கொண்ட பூமி மேலதிக நீரை ஏனைய பகுதிகளுக்கு அனுப்பும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுகின்றது. அந்தப்பாதையில் ஏற்படும் தடைகளை முடியுமானால் உடைத்துக்கொண்டு செல்வதற்கு அது தயங்குவதில்லை. ஒரு திசையில் அந்த முயற்சி தடுக்கப்பட்டால் அதன் நோக்கத்தை அடைவதற்கு அது வேறு திசையைத் தேடுகின்றது. எப்படியாவது அந்த நீரை ஏனைய பூமிகளுக்கு அடையச் செய்யவேண்டும் எனும் உறுதியுன் அது முயற்சிக்கின்றது.
அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கிய வஹியைக்கொண்டு நேர்வழியைப் பின்பற்றிக்கொண்டிருந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களும் அவர்களோடு இருந்த தோழர்களும் அந்த சத்தியத்தை மிகக் கடுமையான தடைகளுக்கு மத்தியில் முடியுமான வழிகளில் பிரச்சாரம் செய்தார்கள். அந்தப் பிரச்சாரத்தால் நேர்வழி பெற்ற ஒரு மனிதரின் கதையைப் படியுங்கள்.
அம்ர் பின் அபஸா ரலியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறுகின்றார்கள்:-
ஜாஹிலிய்யத்தில் இருந்த நான் நிச்சயமாக மனிதர்கள் அனைவரும் வழிகேட்டிலே இருப்பதாகவும், சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கும் அவர்கள் (பிரயோசனமான) எந்தவொன்றிலும் இல்லை எனவும் நம்பியிருந்தேன். அப்படி இருக்கும்போது மக்காவிலே ஒரு மனிதர் முக்கியமான செய்திகளை அறிவிப்பதாகக் கேள்விப் பட்டேன். உடனே எனது வாகனத்திலே அமர்ந்து அவரைத் தேடிச் சென்றேன். அப்போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை அவர்களது சமூகம் ஒடுக்கிய நிலையில் அவர்கள் மறைந்திருந்தார்கள்.........
(ஸஹீஹ் முஸ்லித் கி. ஸ. முஸாபிரீன் 52) சத்தியத்தின் எதிரிகள் வானத்திலிருந்து இறக்கப்பட்ட கொள்கையைப் பிறருக்கு எத்திவைக்கும் பணியில் அவர்களால் முடிந்த தடைகளைப் போட்டார்கள். திரண்டு வரும் நீர் அணைகளை உடைத்துக்கொண்டு செல்வதைப்போன்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அந்தத் தடைகளை உடைத்துக்கொண்டு பிரச்சாரப் பணியை செய்துகொண்டேயிருந்தார்கள்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது பாதையைப் பின்பற்றி ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்தவரை தடைகளை உடைத்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கிய சத்தியத்தைப் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.
வானத்திலிருந்து இறக்கப்படும் நீர் பூமியில் ஓடைகளாக உருவெடுக்கும்போது நுரைகள் தோன்றுவதாகக் கூறுவதன் மூலம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு ஒரு மிகப்பெரிய உண்மையை உணர்த்துகின்றான். வானத்திலிருந்து இறக்கப்பட்ட சத்தியத்தைப் பூமியில் வாழும் நல்லடியார்கள் பிரச்சாரம் செய்யும் அதே கணத்தில் சத்தியத்தின் எதிரிகள் தோன்றி சத்தியத்தை மறைக்க முற்படுவார்கள் என்பதே அந்த உண்மையாகும். அதனைத்தான் அல்லாஹ் மிக அழகாக மற்றொரு வசனத்தில் பின்வறுமாறு கூறுகின்றான்:-
(நபிமார்களை வரம்புமீறிப் புகழும் அவர்கள்) அல்லாஹ்வின் ஒளியைத் தங்களது வாய்களைக்கொண்டே அணைத்துவிட விரும்பு கின்றனர். (அத்தகைய) நிராகரிப்பாளர்கள் வெறுத்தபோதிலும் தனது ஒளியை பூரணமாக்குவதைத் தவிர (மற்ற அனைத்தையும்) அல்லாஹ் மறுக்கின்றான். ( 0 9 : 3 2 )
மேலதிகமாகக் கிடைக்கும் நீரை ஏனைய பகுதிகளுக்குச் செலுத்தும்போது நீரையும் தாண்டி மேலே எழுந்துவிடுகின்ற நுரை யைக் காரணமாக வைத்து எந்தப் பூமியும் நீரைச் செலுத்துவதை நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக நுரையைப் பற்றிப் பொருட் படுத்தாமல் நீரின் பயணம் தொடர்வதற்கு பூமியின் ஒவ்வொரு பகுதியும் துணை நிற்கின்றது. எனவே அந்த நீரின் ஓட்டம் தொடராகவும், வேகமாகவும் நடைபெறும்போது அந்த நீரை மறைத்திருக்கும் நுரை ஓரங்கட்டப்பட்டு அழிந்துபோகின்றது.
வானத்திலிருந்து இறக்கப்பட்ட நீருக்கு சத்தியத்தை ஒப்பிட்ட அல்லாஹ் அதனோடு சேர்த்து மற்றொரு உதாரணத்தையும் கூறி எவருமே விளங்கிக் கொள்ளும் அளவுக்கு இலகுவாக நேர்வழியைத் தெளிவு படுத்தியுள்ளான். இரண்டாவது உதாரணத்தில் ஆபரணங் களையும் பிரயோசனம் தரும் ஏனைய பொருட்களையும் தயார் செய்வதற்காக உலோகங்களை நெருப்புமூட்டி சூடேற்றுவதை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.
உலோகங்களை உருக்குவதற்குத் தேவையான அளவு வெப்பம் கிடைக்கும்வரை அது உருகாது. உலோகம் உருகாவிட்டால் எமது நோக்கமே நிறைவேறாது. அதாவது ஆபரணங்களையோ அல்லது பிரயோசனம் தரும் ஏனைய பொருட்களையோ நாம் செய்ய முடியாது. உலோகம் உருகும்போதும் வெள்ளத்தின்போது தோன்றியது போன்ற நுரை தோன்றுகின்றது என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்திக் கூறுகின்றான்.
சத்தியத்தின் மூலம் தாமும் உயர்வடைந்து இந்த உலகையும் உயர்வடையச் செய்ய வேண்டும் என நினைக்கின்றவர்கள் அதற்கான முயற்சியைத் தேவையான அளவு வேகத்துடன் மேற்கொள்ளும் போதே அந்த மாற்றம் ஏற்படும். அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டும் கடமையைச் செய்வதற்கு உங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள தனிப்பட்ட ஒருசில கடமைகளை நீங்கள் நிறைவேற்றுவது ஒருபோதும் போதுமானதல்ல. ஆபரணங்களைச் செய்வதற்கு உலோகங்களை உருக்கும் சக்தி கொண்ட வெப்பம் தேவைப்படுவது போன்று, சத்தியத்தை மறைத்திருக்கும் அசத்தியம் எனும் நுரைகளை அப்புறப்படுத்தும் சக்திகொண்ட பிரச்சாரம் அவசியமானதாகும். ஆயிஷh வ கூறுகின்றார்கள்:-
"அல்லாஹ்வின் தூதரவர்களே! உஹத் (யுத்த) தினத்தை விடக் கடினமான ஏதாவது நாள் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?|| என (நான்) ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை நோக்கிக் கேட்டேன். (அதற்கு) "உமது சமூகத்திடமிருந்து (எத்தனையோ துன்பங்களை) சந்தித்துள்ளேன். அவர்களிடமிருந்து நான் சந்தித்ததில் மிகவும் கடினமானது அகபாவுடைய தினமாகும். அப்போது (நான்) இப்னு அப்தி யஃலீல் என்பவருக்கு எனது உள்ளத்தை (அதில் உள்ளதை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம்) முன்வைத்தபோது நான் நாடியதை (அவர்) ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே மிகவும் கவலை கொண்டவனாக (நான்) முகம் வைத்த திசையில் நடந்தேன். "கர்னுஸ் ஸஆலிப்" எனும் இடத்தை அடையும்வரை (நான்) சுயநினைவிற்கு வரவில்லை....................
(ஸஹீஹ் முஸ்லிம் கி. ஜிஹாத் 39)
மிக மிக கண்ணியமான ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் வானத் திலிருந்து இறங்கிய வஹியை இந்த உலகில் மேலோங்கச் செய்வதற்காக தனக்குத் துணையாக இருக்குமாறு மக்களை அழைத்தபோது சந்தித்த ஒரு துன்பத்தைப் பற்றியே இந்த ஹதீஸ் எமக்குக் கூறுகின்றது. இதுபோன்ற எத்தனையோ சிரமங்களை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் சந்தித்திருப்பதாக அவர்களே இந்த ஹதீஸில் ஒரே வார்த்தையில் கூறிவிட்டார்கள்.
தனிப்பட்ட விடயங்களில் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை நாம் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுவது போன்று வானத்தில் இருந்து இறக்கப்பட்ட சத்தியத்தை மக்களுக்கு எத்திவைப்பதிலும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்ற வேண்டும். வானத்திலிருந்து இறக்கப்பட்ட சத்தியத்தின் முழுமையான பிரயோசனத்தை அனைத்து மனிதர்களும் பெற்றுக்கொள்வதற்கு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அயராது உழைத்தது போன்று உழைக்க வேண்டும். மொத்தத்தில் வானத்தி லிருந்து இறக்கப்பட்ட நீரைக்கொண்டு தன்னை வளப்படுத்தி மனிதர்களுக்கு நன்மையளிக்கும் பூமியைப் போன்று, அதே வானத் திலிருந்து இறக்கப்பட்ட சத்தியத்தைக் கொண்டு எம்மை வளப்படுத்திக் கொள்வதுடன் ஏனையவர்களுக்கு அந்த சத்தியத்தைக் கிடைக்கச் செய்வதில் முழு அக்கறையுடன் ஈடுபடவேண்டும்.
வானத்திலிருந்து கிடைத்த நீரை பூமி நீNhட்டமாக மாற்றியதன் காரணமாகத் தோன்றிய நுரை நீரின் மேலே வந்து நீரை மறைத்து அதனை அசிங்கப் படுத்தினாலும் அது புறக்கணிக்கப்பட்டுவிடும் எனும் உண்மையையும் அல்லாஹ் கூறியுள்ளான். அதேநேரம் மனிதர்களுக்குப் பிரயோசனம் தரக்கூடிய நீர் பூமியில் தேங்கி நிற்பதாகக் கூறுகின்றான். நீரோடைகளாக ஒடுகின்றபோது பிரயோ சனம் பெறாதவர்கள் பின்னராவது பிரயோசனம் பெற்றுக் கொள்ளும் விதத்தில் குளம், கிணறு போற்றவற்றில் நீர் சென்று தங்குகின்றது.
வானத்திலிருந்து அல்லாஹ் இறக்குகின்ற நீர் இல்லாமல் ஒரு பசுமையான உலகை நீங்கள் பார்க்க முடியுமா...................? ஒருபோதும் முடியாது. அதேபான்று வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கிய சத்தியம் இல்லாமல் பசுமையான வாழ்வை மனிதர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிர்பார்க்க முடியாது, சமூக வாழ்விலும் எதிர்பார்க்க முடியாது.
வானத்திலிருந்து இறங்கிய
சத்தியத்தைப் பரவச் செய்வதில் தடையாக
நிற்கும் அசத்தியத்தைப் பொருட்படுத்தாமல் உங்களது போராட்டத்தை முழு மூச்சுடன் மேற்கொள்ளுங்கள்!
அத்தகைய போராட்டத்தில் முழுமையான
பங்குதாரர்களாக இருங்கள்!!