...

கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 13

கேள்வி : 3 5
புகைப்படம், வீடியோ போன்றவற்றை முழுமையாக ஹராம் எனக்கூறி மிகவும் கண்டிப்புடன் தடைசெய்யும் ஒரே ஜமாஅத் நீங்கள்தான். ஆனால் வீடியோ மூலம் இன்று பீ. ஜெய்னுலாபிதீன் போன்றவர்கள் மக்களை இஸ்லாத்திற்கு எடுக்கும் மிகச் சிறந்த பணியை செய்துகொண்டிருக்கின்றார்கள். இவற்றைப் பார்த்தாவது உங்களது முடிவு தவறு என உங்களுக்குத் தோன்றவில்லையா?

கேள்வி : 3 6
தொழுகையை விட்டவன் காபிராகி விட்டான் என்பது பொதுவான ஒரு ஹதீஸாகும். தொழுகைகளில் எத்தனையோ வகையான தொழுகைகள் உள்ளன. இவற்றில் எந்தத் தொழுகையை விடுவதன் மூலம் குப்ர் ஏற்படுகின்றது?

கேள்வி : 3 7
முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் அல்லாதவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றால் அது நிராகரிப்பை ஏற்படுத்தும் செயல் என்பதாக நீங்கள் வாதிக்கின்றீர்கள். அதேநேரம் உங்களது ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம்களுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை நீங்களும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் கொண்டு சென்று தீர்ப்புக் கேட்கின் றீர்கள். எனவே நீங்கள் பிறர்மீது சுமத்தும் அதே குற்றச்சாட்டு உங்கள்மீதும் ஏற்படுகின்றதே.......?







கேள்வி : 3 5
புகைப்படம், வீடியோ போன்றவற்றை முழுமையாக ஹராம் எனக்கூறி மிகவும் கண்டிப்புடன் தடைசெய்யும் ஒரே ஜமாஅத் நீங்கள்தான். ஆனால் வீடியோ மூலம் இன்று பீ. ஜெய்னுலாபிதீன் போன்றவர்கள் மக்களை இஸ்லாத்திற்கு எடுக்கும் மிகச் சிறந்த பணியை செய்துகொண்டிருக்கின்றார்கள். இவற்றைப் பார்த்தாவது உங்களது முடிவு தவறு என உங்களுக்குத் தோன்றவில்லையா?

பதில் :
காதியானிகளின் பிரச்சாரம் இன்று உலகளாவிய ரீதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு என தனியான ஒரு தொலைக்காட்சி சேவைகூட இயங்கிக்கொண்டிருக்கின்றது. அவர்கள் இஸ்லாம் எனும் பெயரில் ஒரு கொள்கையைப் போதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த இஸ்லாத்தை ஏற்று மக்கள் அவர்களுடன் சேரத்தான் செய்கின்றார்கள்.

காதியானிகளுடன் மக்கள் இணைகின்றார்கள் என்பதற்காக ஒரு முஸ்லிம் “இறுதி நபி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள்தான்” எனும் கொள்கையை மறுக்கும் காதியானிகளின் கொள்கை சரியானது என்பதாக வாதிப்பானா..........?

புகைப்படம் பிடித்தல், வீடியோ எடுத்தல் போன்றவை உட்பட தலையுள்ள உருவம் அல்லது தலையை வரைவதனை இஸ்லாம் இணைவைத்தலைப் போன்று பாரிய குற்றமாகக் கருதுகின்றது. அதனை இணைவைத்தல் என்று அல்குர்ஆனோ அல்லது ஸஹீஹான ஹதீஸோ கூறவில்லை. ஆனால் அதற்குரிய தண்டனையைப் பார்க்கும்போது இணைவைத்தவர் தண்டிக்கப்படுவது போன்று: அதனைச் செய்பவர் தொடர்ந்து நரகிலே தண்டிக்கப்படுவதாக இஸ்லாம் எங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றது.

ஆயிஷh கூறுகின்றார்கள்:-
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் நுழைந்தார்கள். அப்போது வீட்டிலே ஒரு திரைச் சீலை இருந்தது. அதிலே உருவப் படங்கள் காணப்பட்டன. (அதனைப் பார்த்த)உடனேயே அவர்களது முகம் (சிவப்பு) நிறமாகிவிட்டது. பின்னர் அந்தத் திரைச்சீலையை எடுத்து அதனைக் கிழித்தார்கள். (பின்னர்) “இந்த உருவப்படங்களை வரைபவர்கள் நிச்சயமாக மறுமைநாளில் மிகக் கடினமாக வேதனை செய்யப்படுவோரில் உள்ளாராவார்கள்.” எனக் கூறினார்கள்.
(ஸஹீஹீல் புஹாரி கி. அதப் 75)

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
யார் ஒரு உருவப்படத்தை வரைகின்றாரோ அதிலே (அவர்) உயிரை ஏற்படுத்தும்வரை மறுமைநாளில் அதற்காக (அவரை) அல்லாஹ் தண்டிப்பான். அதிலே (அவர் ஒருபோதும்) உயிரை ஏற்படுத்தக்கூடியவர் அல்ல. (மு. அஹ்மத், அபூ தாவூத் - ஸஹீஹ்)

இவ்வளவு பாரதூரமான ஹராம்களைச் செய்பவர்கள் மக்களை இஸ்லாத்திற்கு எடுப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது இஸ்லாமியக் கண்னோட்டத்தில் முற்றிலும் தவறாகும். காதியானி களுடன் இணைந்துகொள்வோர் இஸ்லாத்தில் இணையவில்லை என்பதை நீங்கள் எவ்வாறு விளங்கிவைத்துள்ளீர்களோ அதேபோன்று பீ. ஜெய்னுலாபிதீனுடன் இணைவோரும் இஸ்லாத்தில் நுழையவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.

எம்மையும், எமது குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பதே எமது முதல் கடமையாகும். தலையுள்ள உருவம் அல்லது தலையைப் புகைப்படம் பிடித்தல், வீடியோ எடுத்தல் நரகில் தொடராகத் தண்டனையைப் பெற்றுத்தரும் பாவங்களாகும். எனவே அவற்றின் மூலம் இஸ்லாத்தின்பால் அழைப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறானதாகும். இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வாறு செய்வது அவர்களை நம்புவோரையும் சேர்த்து அழிவில் தள்ளும் செயலாகும். அந்த வழிமுறை எவ்வளவுதான் கவர்ச்சியானதாக இருந்தாலும் முற்றிலும் தடைசெய்யப்பட்ட அந்த வழிமுறையை ஜமாஅதுல் முஸ்லிமீன் ஒருபோதும் கடைபிடிக்க மாட்டாது.

கேள்வி : 3 6
தொழுகையை விட்டவன் காபிராகி விட்டான் என்பது பொதுவான ஒரு ஹதீஸாகும். தொழுகைகளில் எத்தனையோ வகையான தொழுகைகள் உள்ளன. இவற்றில் எந்தத் தொழுகையை விடுவதன் மூலம் குப்ர் ஏற்படுகின்றது?

பதில் :
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) கூறுகின்றார்கள்:-
நஜ்த்வாசிகளில் ஒரு மனிதர் தலைவிரிகோலமாக ரஸூலுல்லாஹி (ஸல்)அவர்களிடம் வந்தார். (எம்மை அவர்) நெருங்கும் வரை அவரது ஓசையின் ரீங்காரம் கேட்கின்றது, (ஆனால் அவர்) கூறுவது விளங்கவில்லை. அப்போது (அவர்) இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது “பகலிலும் இரவிலும் ஐந்து (நேரத்)தொழுகைகள் உள்ளன” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு (அவர்) அது அல்லாமல் (மேலதிக தொழு கைகள்) என்மீது கடமையா? எனக் கேட்டார். உபரியாக (நீர்) தொழுதாலேயன்றி (வேறு) இல்லை எனக் கூறினார்கள்........
(ஸஹீஹுல் புஹாரி கி. ஈமான் 33)

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
....... பின்னர் அல்லாஹ் என்மீது ஐம்பது (நேரத்) தொழுகை களைக் கடமையாக்கினான். அதனை எடுத்துக்கொண்டு மூஸா (அலை) அவர்களை அடையும்வரை (நான்) திரும்பி வந்தேன். அப்போது “உமது உம்மத்தினர் மீது என்ன கடமையாக்கப்பட்டுள்ளது?” என மூஸா (அலை) கேட்டார்கள். “ஐம்பது (நேரத்) தொழுகைகள் அவர்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினேன். “உமது ரப்பிடம் திரும்பிச் சென்று (அதனைக் குறைக்குமாறு) கேட்பீராக! ஏனெனில் (உமது உம்மத்) அதற்குச் சக்திபெறமாட்டாது” எனக் கூறினார்கள். எனவே (நான்) திரும்பிச் சென்று எனது ரப்பிடம் வேண்டினேன். (அவன்) அதில் அரைவாசியை அகற்றினான். பின்னர் (நான்) மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்து (நடந்ததைக் கூறினேன்.) அப்போது “(மீண்டும்) உமது ரப்பிடம் சென்று வேண்டுவீராக!” எனக்கூறினார்கள். அதேபோன்று கூறினேன். உடனே (மேலும்) அரைவாசியை அகற்றினான். பின்னர் (நான்) மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்து அதனை அறிவித்தேன். அதற்கு “உமது ரப்பிடம் திரும்பிச் சென்று (அதனைக் குறைக்குமாறு) கேட்பீராக! ஏனெனில் (உமது உம்மத்) அதற்குச் சக்திபெறமாட்டாது” எனக் கூறினார்கள். எனவே (நான்) திரும்பிச் சென்று எனது ரப்பிடம் வேண்டினேன். அப்போது (அவன்) “(இப்போது) அது (எண்ணிக்கையால்) ஐந்தாகும். (கூலியில்) ஐம்பதாகும். என்னிடம் (கூறப்பட்ட) வார்த்தை மாற்றப்படுவதில்லை” எனக் கூறினான். உடனே (நான்) மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போதும் “உமது ரப்பிடம் திரும்பிச் சென்று (அதனைக் குறைக்குமாறு) கேட்பீராக!” எனக் கூறினார்கள். அதற்கு “நிச்சயமாக (நான்) எனது ரப்பிடம் (மேலும் குறைக்கும்படி கேட்பதற்கு) வெட்கப்பட்டுவிட்டேன்” எனக் கூறினேன்.
(ஸஹீஹுல் புஹாரி கி. அன்பியா 07)

முஸ்லிம்கள் இரவிலும் பகலிலும் ஐந்துநேரம் தொழுவது கடமையாகும். அந்தத் தொழுகைகளை யார் விடுகின்றானோ அவன் காபிராகிவிடுகின்றான். ஆரம்பத்தில் ஐம்பது நேரமாகக் கடமையாக்கப் பட்ட தொழுகையை எங்களால் நிறைவேற்ற முடியாது எனும் காரணத்தை முன்னிட்டே அது ஐந்துநேரத் தொழுகைகளாகக் குறைக்கப்பட்டது. அளவற்ற அருளாளனான அல்லாஹ் ஐம்பது நேரமாகக் கடமையாக்கிய தொழுகைகளை ஐந்தாகக் குறைத்து விட்டாலும் அதனை சரிவர நிறைவேற்றுபவர்களுக்கு ஐம்பது நேரம் தொழுத கூலியையே கொடுக்கின்றான். மனிதன் தன்னைப் படைத்தவனை அடிபணிகின்றான் என்பதற்கு ஒரு தெளிவான சான்றாக அல்லாஹ் ஐந்துநேரத் தொழுகையை அமைத்துள்ளான். எனவே அந்தத் தொழுகைகளை எவராவது விட்டுவிட்டால் அவர்களை அல்லாஹ் முஸ்லிம் அல்லாதவர்களாகவே தீர்மானிக்கின்றான்.

கேள்வி : 3 7
முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் அல்லாதவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றால் அது நிராகரிப்பை ஏற்படுத்தும் செயல் என்பதாக நீங்கள் வாதிக்கின்றீர்கள். அதேநேரம் உங்களது ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம்களுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை நீங்களும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் கொண்டு சென்று தீர்ப்புக் கேட்கின் றீர்கள். எனவே நீங்கள் பிறர்மீது சுமத்தும் அதே குற்றச்சாட்டு உங்கள்மீதும் ஏற்படுகின்றதே.......?

பதில் :
அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் தாகூத்களாவர். இஸ்லாமியத் தலைமைத்துவத்தை விட்டுவிட்டு தாகூத்களிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்வது பற்றி கண்ணியமிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:-

உமது ரப்பின்மீது சத்தியமாக! (அவர்கள்) தங்களுக்கு மத்தியில் நடந்த சச்சரவில் உம்மைத் தீர்ப்பாளராக ஏற்று, பின்னர் (நீர்) வழங்கிய தீர்ப்பைத் தங்களது உள்ளங்களில் எவ்வித அதிருப்தியும் இல்லாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாதவரையில் (அவர்கள்) விசுவாசிகளாக மாட்டார்கள்.
( 0 4 : 65 )

(நபியே) உம்மீது இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் விசுவாசிப்பதாகச் சாதிக்கின்றவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) தாகூத்திடம் தீர்ப்புக் கேட்டுச்செல்ல விரும்புகின்றனர். அவனை நிராகரிக்கும்படி (ஏற்கனவே அவர்கள்) நிச்சயமாக ஏவப்பட்டுள்ளார்கள். iஷத்தானோ அவர்களை மிகத் தாரமான வழிகேட்டில் இட்டுச்செல்லவே விரும்புகின்றான். அல்லாஹ் இறக்கியதன்பாலும், அவனது தூதரின்பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் ஒரேயடியாக உம்மை விட்டும் (தங்களை) தடுத்துக்கொள்வதைக் காண்பீர்.
( 0 4 : 6 0, 6 1 )

விசுவாசிகளுக்கான நிபந்தனைகளில் ஒன்று அவர்கள் தாகூத்களை நிராகரிக்க வேண்டும். தாகூத்களை நிராகரித்துவிட வேண்டும் என ஆரம்பத்திலேயே முஸ்லிம்களுக்கு ஏவப்படுகின்றது. தாகூத்களை நிராகரிப்பதாக வெளிப்படையில் கூறிவிட்டு அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்ல விரும்புவது நயவஞ்சகத்தனமாகும்.

இஸ்லாத்தைத் தங்கள் தீனாக ஏற்று, ஒரே தலைமைத் துவத்தின் கீழ் கட்டுப்பட்டு வாழும் மக்களே முஸ்லிம்கள் ஆவார்கள். அவர்களது கூட்டமைப்பை ஜமாஅதுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) எனக் கூறப்படும். ஜமாஅதுல் முஸ்லிமீனில் உள்ள முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் எந்தவொரு சர்ச்சைக்கும் தீர்ப்புக் கேட்டு நாம் ஒருபோதும் தாகூத்களிடம் செல்வதில்லை. ஆனால் தங்களை முஸ்லிம்களாகக் காட்டிக்கொள்ளும் ஏனைய அத்தனை பிரிவுகளும் அவர்களது பார்வையில் முஸ்லிமாக இருப்பவர்களுடன் பிணக்கு ஏற்படும்போது நேரடியாக தாகூத்களிடமே செல்லுகின்றார்கள். அத்தகையவர்கள் விசவாசிகளாக இல்லை என்பதற்கு அவர்களது இந்த செயலே போதுமான ஆதாரமாகும்.

ஜமாஅதுல் முஸ்லிமீனில் இல்லாதவர்கள் முஸ்லிம்களின் தீர்ப்பை ஏற்கச் சம்மதித்தால் அந்த சந்தர்ப்பத்திலும் நாம் தாகூத்களிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்வதில்லை. அவர்கள் இஸ்லா மியத் தலைமைத்துவத்தின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் அவர்களுக்கு எதிராக தாகூத்களிடம் முறைப்படுகின்றோம்.

நான்காவது அத்தியாயத்தின் அறுபத்தி ஐந்தாவது வசனத்தில் “தங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சச்சரவில்...........” என்பதாகவே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதாவது முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் சச்சரவிற்குத் தீர்ப்புத் தேடி தாகூத்களிடம் செல்வதே விசுவாசம் இல்லாதவர்களின் செயல் என்பதாகக் கூறுகின்றான். ஏனெனில் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவது அவர்களின் தலையாய கடமையாகும். எனவே முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் சச்சரவுகளில் இஸ்லாமிய ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய தலைமைத்துவத்திடம் நாம் தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இஸ்லாமிய ஆட்சி இல்லாத இடங்களில் ஜமாஅதுல் முஸ்லிமீனில் இல்லாதவர்களைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் இஸ்லாமியத் தலைமைத்துவத்திற்குக் கிடையாது. அவர்களாக விரும்பி இஸ்லாமியத் தலைமைத்துவத்திடம் தீர்ப்புக் கேட்டு வந்தாலேயன்றி அவர்களுடன் ஏற்படுகின்ற சர்ச்சைகளில் நாம் எமது தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது. எனவே நாம் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரிகளிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

“உங்களது ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம்களுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை நீங்களும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் கொண்டு சென்று தீர்ப்புக் கேட்கின் றீர்கள்.” என்பதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளதை முற்றாக நாங்கள் ஆட்சேபிக்கின்றோம். ஏனெனில் ஜமாஅதுல் முஸ்லிமீன் இருக்கும்போது அதுபற்றி அறிந்தும் அதில் இணையாமல் வெளியில் உள்ளவர்கள் அல்லாஹ்விடம் முஸ்லிமாக இருக்க முடியாது. அவர்கள் ஜாஹிலிய்யத்தில் இருப்பதாகவே இஸ்லாம் கூறுகின்றது. அத்தகைய நிலையிலேயே அவர்கள் மரணித்துவிட்டால் அவர்கள் செல்லுமிடம் நரகம் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும். எனவே பிரிவுகளில் உள்ளவர்கள் அவர்கள் முஸ்லிம்களாகக் கருதுபவர்களுடன் சச்சரவு ஏற்படும்போது தாகூத்களிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்வது போன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் சச்சரவுகளை நாம் ஒருபோதும் தாகூத்களிடம் தீர்ப்புக் கேட்டு எடுத்துச் செல்வதில்லை. அல்ஹம்துலில்லாஹ்!