...

கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 17

கேள்வி : 4 8
தவறுகள் செய்பவர்களில் ஒரு சிலருடன் ஏனைய முஸ்லிம்கள் எவ்விதத் தொடர்பும் வைக்கக்கூடாது என்பதாக நீங்கள் தடை விதிக்கின்றீர்கள். இவ்வாறு செய்வதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது எனக் கேட்டால் யுத்தத்திற்குச் செல்லாத ஒரு சில நபித் தோழர்களுக்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். யுத்தத்திற்குச் செல்லாதவர்களுக்கு ரஸூலுல்லாஹி (ஸல்) தடை விதித்தார்கள் என்பதை ஏனைய விடயங்களுக்கு ஆதாரமாக நீங்கள் காட்டுவது தெளிவான கியாஸாகும். கியாஸை மறுக்கும் நீங்கள் எப்படி கியாஸின் அடிப்படையில் செயல்பட முடியும்?


கேள்வி : 4 9
நரகிலிருந்து தவ்ஹீத்வாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹிஸ்புல்லாஹ் எனும் கூட்டமே வெற்றி பெறும் என்பதாக அல்குர்ஆனிலே அல்லாஹ் கூறுகின்றான். மற்றுமோர் இடத்தில் “நீங்கள் ஸாதிகீன் எனும் உண்மையாளர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்” என்பதாகக் கூறுகின்றான். இந்தகைய குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களுக்கு அமைய ஹிஸ்புல்லாஹ் என்றும், ஜமாஅதுத் தவ்ஹீத் என்றும் ஜமாஅத்துக்கள் இருக்கும்போது ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் பெயரில் நீங்கள் செயல்படுவதுடன் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஜமாஅத்துக்கள் நரகம் செல்லக்கூடியவை என்பதாகவும் நீங்கள் எவ்வாறு கூற முடியும்.................?

கேள்வி : 5 0
இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு வகையான வழிகெட்ட பிரிவினர்கள் தோன்றியுள்ளார்கள். அவ்வாறு தோன்றிய பிரிவுகள் தங்களது வழிகெட்ட கொள்கைக்கு ஒருசில அல்குர்ஆன் வசனங் களையோ அல்லது ஹதீஸ்களையோ ஆதாரமாகக் கொண்டிருந் தார்கள். அவர்களில் ஹவாரிஜ்கள் என்பவர்களும் ஒரு சாரார் ஆவார்கள். அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து காபிர்கள் எனக் கூறியவர்களாவார்கள். ஜமாஅதுல் முஸ்லிமீன் எனக் கூறிக்கொள்ளும் நீங்களும் அந்த ஹவாரிஜ்களைச் சேர்ந்தோரே என்பதாக ஒரு சில அறிஞர்கள் எமக்கு உங்களை அடையாளம் காட்டுகின்றார்கள். இக்குற்றச்சாட்டிற்கு உங்களது பதில் என்ன?




கேள்வி : 4 8
தவறுகள் செய்பவர்களில் ஒரு சிலருடன் ஏனைய முஸ்லிம்கள் எவ்விதத் தொடர்பும் வைக்கக்கூடாது என்பதாக நீங்கள் தடை விதிக்கின்றீர்கள். இவ்வாறு செய்வதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது எனக் கேட்டால் யுத்தத்திற்குச் செல்லாத ஒரு சில நபித் தோழர்களுக்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். யுத்தத்திற்குச் செல்லாதவர்களுக்கு ரஸூலுல்லாஹி (ஸல்) தடை விதித்தார்கள் என்பதை ஏனைய விடயங்களுக்கு ஆதாரமாக நீங்கள் காட்டுவது தெளிவான கியாஸாகும். கியாஸை மறுக்கும் நீங்கள் எப்படி கியாஸின் அடிப்படையில் செயல்பட முடியும்?


பதில் :
ஆகுமான ஒரு விடயத்தை சில நன்மைகள் கருதி ஒரு சிலருக்கு அல்லது ஒரு சில காலத்திற்குத் தடைசெய்யும் உரிமையை அல்லாஹ் சில மனிதர்களுக்குக் கொடுத்துள்ளான். பாவமாக இல்லாத பயணம் மஹ்ரம் இருந்தால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அதேநேரம் அதனை அவளது கணவன் சில காரணங்களை முன் வைத்துத் தடைசெய்தால் அதற்கான உரிமை கணவனுக்கு இருப்பதாக இஸ்லாம் கூறுகின்றது. மனைவியை மாத்திரம் கட்டுப் படுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள கணவன் அல்லாஹ்வினால் அனுமதித்த ஒன்றைத் தடைசெய்ய முடியுமானால் முழு முஸ்லிம் களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள ஒரு அமீர் மக்களுக்கு அல்லாஹ் அனுமதித்த ஒன்றை அவர்களுக்கு ஏன் தடை செய்யமுடியாது? அமீருக்குக் கட்டுப்படுவது கடமை எனக் கூறப்பட்டுள்ளதே இவ்வாறு தடை செய்வதற்கு போதுமான ஆதாரமாகும். இருந்தாலும் தடைவிதிக்கும்போது ஸலாத்திற்குக் கூட பதில் சொல்லக்கூடாது என்றாகின்றபோது அதில் ஏற்படக்கூடிய குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களே தடை விதித்துள்ளார்கள் என்பதாக ஆதாரம் காட்டப்படுகின்றது. தபூக் யுத்தத்தில் கலந்துகொள்ளாதவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதனை விரிவாகக் கூறும் ஹதீஸினை இமாம் புஹாரி பதிவு செய்துள்ளார்கள். “குற்றவாளிகளுடனும், பாவம் செய்தவர் களுடனும் கதைப்பது, சந்திப்பது போன்றவற்றைத் தடை செய்யும் உரிமை முஸ்லிம்களின் தலைவருக்கு உண்டா?” எனத் தலைப்பிட்டு அதற்குப் பதிலாகவே இமாம் புஹாரி அந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள். இமாம் புஹாரியின் அந்த ஹதீஸ் தொகுப்பிற்கு மிகச் சிறந்த ஒரு விளக்கவுரையை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இது பற்றிப் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.

(யுத்தத்தில் கலந்துகொள்ளாதோருக்குத் தடை விதிக்கப் பட்ட சம்பவமாகிய) அதிலே பாவம் செய்தவர்களுக்கு ஸலாம் சொல்லாமல் இருக்கலாம் என்பதும், அவரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருக்கலாம் என்பதும் காணப்படுகின்றது. மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுக்கக் கூடாது எனத் தடுக்கப்பட்டிருப்பது மார்க்கத்திற்காக அல்லாமல் (சுய நலனுக்காக) வெறுப்பவ ருக்கேயாகும்.
(இமாம் இப்னு ஹஜர் ப. பாரி கி. மஙாஸி)

உண்மையில் பாவம் செய்பவர்களை சீர்திருத்துவதற்கு இஸ்லாம் காட்டித் தந்துள்ள வழிகளில் ஒன்று: அவர்களுடனான உறவுகளைத் துண்டிப்பதாகும் என்பதனை மேற்படி ஹதீஸ் எமக்கு எடுத்துக் கூறுகின்றது. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி இதனைச் செய்துள்ளார்கள். எனவே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது இந்த செயல் அவர்களைப் பின்பற்றக்கூடிய ஒவ்வொரு முஸ்லிம் தலைவர்களுக்கும் முன்மாதிரியாகும்.

கேள்வி : 4 9
நரகிலிருந்து தவ்ஹீத்வாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹிஸ்புல்லாஹ் எனும் கூட்டமே வெற்றி பெறும் என்பதாக அல்குர்ஆனிலே அல்லாஹ் கூறுகின்றான். மற்றுமோர் இடத்தில் “நீங்கள் ஸாதிகீன் எனும் உண்மையாளர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்” என்பதாகக் கூறுகின்றான். இந்தகைய குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களுக்கு அமைய ஹிஸ்புல்லாஹ் என்றும், ஜமாஅதுத் தவ்ஹீத் என்றும் ஜமாஅத்துக்கள் இருக்கும்போது ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் பெயரில் நீங்கள் செயல்படுவதுடன் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஜமாஅத்துக்கள் நரகம் செல்லக்கூடியவை என்பதாகவும் நீங்கள் எவ்வாறு கூற முடியும்.................?

பதில் :
முஸ்லிம்களைக் குறிப்பதற்கு அல்லாஹ் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தியுள்ளான். அதேபோன்று அவனது தூதரும் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். இருந்தும் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு பிரிவுகள் காணப்படும் இன்றைய காலத்தில் ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும், அவர்களது இமாமுடனும் சேர்ந்துகொள்ளும்படியே ரஸூலுல்லாஹி (ஸல்) ஏவியுள்ளார்கள்.

“ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும், அவர்களது இமாமுடனும் சேர்ந்திருப்பீராக!” எனக் கூறினார்கள். “அவர்களுக்கு என ஒரு இமாமும், ஒரு ஜமாஅத்தும் இல்லை என்றால்........................?” எனக் கேட்டேன். (அதற்கு) “உமக்கு மரணம் வரும்வரை ஒரு மரத்தின் வேரைக் கவ்விப் பிடித்து, அதிலேயே நீர் இருக்க நேரிட்டாலும் அந்தப் பிரிவுகள் அனைத்தை விட்டும் ஒதுங்கி இருப்பீராக!” எனக் கூறினார்கள்.
(ஸ.புஹாரி கி. மனாகிப் - 22, ஸ.முஸ்லிம் கி. இமாரா - 13)

ஹதீஸிலே “அஹ்லுத் தவ்ஹீத்” என்பதாகவே வந்துள்ளது. “ஜமாஅதுத் தவ்ஹீத்” என எந்தவொரு ஹதீஸிலும் கிடையாது. ஜமாஅதுத் தவ்ஹீத் என சுயமாகப் பெயர் வைத்துக்கொண்டதை சரி என நாம் ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் ஜமாஅதுத் தவ்ஹீதிலே சேர்ந்துகொள்ளும்படி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கூறவில்லை. மாறாக ஜமாஅதுல் முஸ்லிமீனிலே சேர்ந்துகொள்ளும்படிதான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாவிட்டால்கூட ஏனைய பிரிவுகளை விட்டும் விலகியிருக்கும்படி ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள்.

ஹிஸ்புல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் கட்சி என்பது பொருளாகும். ஸாதிகீன் என்றால் உண்மையாளர்கள் என்பது பொருளாகும். முஸ்லிம்களே உண்மையாளர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அஹ்லுத் தவ்ஹீத் என்றால் ஏகத்துவவாதிகள் என்பது பொருளாகும். இவை அனைத்துமே முஸ்லிம்களைக் குறிப்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் பயன்படுத்தியுள்ள பெயர்களாகும். இவை தனித்தனியான பிரிவுகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அல்ல. எனவே இத்தகைய பெயர்களில் உள்ள கூட்டங்கள் சுவனம் செல்லும் என்பதாக எவரும் விளங்க முடியாது. ஒரேயொரு கூட்டம் மாத்திரமே சுவனம் செல்லும் என்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் தெளிவாகக் கூறிவிட்ட உண்மையாகும். அந்தக் கூட்டத்தை கூட்டிக்காட்டும்போது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீன் என்பதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.

அன்று தொட்டு இன்று வரைக்கும் அல்லாஹ் தனது அடியார்களைக் குறிப்பதற்காக அவர்களுக்குச் சூட்டியிருக்கும் பெயர் முஸ்லிம்கள் என்பதேயாகும்.

(இதற்கு) முன்னரும், (அல்குர்ஆனாகிய) இதிலும் அவன் தான் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டுள்ளான். .......
( 2 2 : 7 8 )

கேள்வி : 5 0
இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு வகையான வழிகெட்ட பிரிவினர்கள் தோன்றியுள்ளார்கள். அவ்வாறு தோன்றிய பிரிவுகள் தங்களது வழிகெட்ட கொள்கைக்கு ஒருசில அல்குர்ஆன் வசனங் களையோ அல்லது ஹதீஸ்களையோ ஆதாரமாகக் கொண்டிருந் தார்கள். அவர்களில் ஹவாரிஜ்கள் என்பவர்களும் ஒரு சாரார் ஆவார்கள். அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து காபிர்கள் எனக் கூறியவர்களாவார்கள். ஜமாஅதுல் முஸ்லிமீன் எனக் கூறிக்கொள்ளும் நீங்களும் அந்த ஹவாரிஜ்களைச் சேர்ந்தோரே என்பதாக ஒரு சில அறிஞர்கள் எமக்கு உங்களை அடையாளம் காட்டுகின்றார்கள். இக்குற்றச்சாட்டிற்கு உங்களது பதில் என்ன?

பதில் :
ஹவாரிஜ் என்பது ஒரு அறபுச் சொல்லாகும். வெளியேறியவர்கள் என்பது இதன் பொருள். இஸ்லாமியப் பரிபாஷையில் இஸ்லாமியத் தலைமைத்துவத்தை விட்டும் வெளியேறுவோரை ஹவாரிஜ் எனக் கூறப்படும்.

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
எனது உம்மத்திலே இரண்டு குழுக்கள் தோன்றும். அப்போது அந்த இரண்டு குழுக்களினிடையே வெளியேறிச் செல்லும் ஒரு கூட்டம் வெளியேறுவார்கள். அவர்களில் சத்தியத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் (வெளியேறியவர்களாகிய) அவர்களைக் கொலை செய்யும் கடமையைச் செய்வார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி. ஸகாத் 47)

இஸ்லாமியத் தலைமைத்துவத்தை விட்டும் ஒரு கூட்டம் வெளியேறும் என்பதை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். அலி (ரலி)அவர்களின் காலத்தில் இவர்கள் வெளியேறிச் சென்றபோது இவர்களை அலி (ரலி) கொன்றார்கள். இன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீன் தோன்றும்போது; உலகிலே இஸ்லாமியத் தலைமைத்துவம் காணப்படவில்லை. இன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனில் இருப்பவர்கள் அப்படியானதொரு தலைமைத்துவத்திற்கு உடன்படிக்கை செய்திருக்கவும் இல்லை. இந்த நிலையில் எம்மை ஹவாரிஜ் என்பதாக சில அறிஞர்கள் குறிப்பிடுவதாக இருந்தால் அது ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. அந்த அறிஞர்களுக்கு இஸ்லாத்தின் பார்வையில் ஹவாரிஜ் என்போர் யார் என்பது பற்றிய அறிவு இல்லாவிட்டாலும், ஹவாரிஜ் எனும் அறபுச் சொல்லின் பொருள்கூட அவர்களுக்குத் தெரியாதா.......?

ஜமாஅதுல் முஸ்லிமீனை விட்டும் வெளியேறுபவர்களே இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஹவாரிஜ்களாவார்கள். அலி (ரலி) அவர்களின் காலத்தில் தோன்றிய ஹவாரிஜ்கள் அன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனாகிய அலி (ரலி) அவர்களின் ஜமாஅத்திலிருந்து வெளியேறிச் சென்றார்கள். எனவே அலி (ரலி)அந்த ஹவாரிஜ்களைக் கொன்றார்கள். அவ்வாறு வெளியேறிச் சென்றதனால் கொல்லப்பட்டவர்களை “ஹவாரிஜ்” எனக்கூறுவது முற்றிலும் பொருத்தமானதே. ஏனெனில் அவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீனிலிருந்து வெளியேறிச் சென்றிருந்தார்கள். அந்த ஹவாரிஜ்கள் “பெரும்பாவம் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்” என்றதொரு கருத்தையும் முன்வைத்தார்கள். இந்தக்கருத்து முற்றிலும் இஸ்லாத்துக்கு முரணாக இருந்தாலும் இந்தக் கருத்தைக் கூறுபவர்கள் அனைவரும் ஹவாரிஜ் எனக் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

ஜமாஅதுல் முஸ்லிமீன் முன்வைக்கும் கொள்கை தவறானது என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்க முடியாத ஒரு சிலர் எம்மீது சில அபாண்டங்களை சுமத்தி எம்மைப்பற்றிய தப்பான கருத்துக்களை மக்களிடம் உண்டாக்க முயற்சி செய்கின்றனர். அவற்றில் ஒன்றாகப் “பெரும்பாவங்கள் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்” எனும் கருத்தை நாம் கூறுவதாக மக்களுக்குக் கூறுகின்றார்கள். “பெரும்பாவங்களில் எதனைச் செய்தாலும் அதனைச் செய்வோர் நரகில் நரந்தரமாக இருப்பார்கள்” என அன்றைய ஹவாரிஜ்கள் கூறினார்கள். “இணைவைக்காதவர்கள் பெரும்பாவங்களைச் செய்துவிட்டு பாவமன்னிப்புத் தேடாவிட்டால் அவர்கள் நரகில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள்” என்பது ஸுன்னத் வல் ஜமாஅத் எனக் கூறுவோரது நம்பிக்கையாகும். இந்த இரண்டுமே குர்ஆன் ஸுன்னாவிற்கு முரணான நம்பிக்கையாகும்.

பெரும்பாவங்கள் செய்வோர் நிரந்தர நரகம் என்பதும் அல்லாஹ்வின் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பெரும்பாவங்களில் எதனைச் செய்தாலும் அதனைச் செய்பவர் என்றோ ஒருநாள் சுவனம் செல்வார் என்பதும் அல்லாஹ்வின் வேதத்தில் எங்குமே கூறப்படவில்லை.

குர்ஆன், ஸுன்னா ஒளியில் இணைவைத்தலைத் தவிரவுள்ள ஒரு சில பெரும்பாவங்களைச் செய்தவர் அல்லாஹ்வினால் மன்னிக்கப் படாவிட்டால் அந்தப் பாவத்திற்குரிய தண்டனையை அனுபவித்ததன் பின்னால் என்றோ ஒருநாள் சுவனம் செல்வார். இதனை உண்மைப் படுத்தும் ஆதாரம் பின்வரும் ஹதீஸாகும்.

அபூதர் (ரலி) கூறுகின்றார்கள்:-
(ஒருமுறை) நபி அவர்களிடம் வந்தேன். அவர்கள் வெள்ளை நிற ஆடை ஒன்றை அணிந்தவர்களாகத் தூங்கிக் கொண்டிருந் தார்கள். பின்னர் (மீண்டும்) அவர்களிடம் வந்தபோது (அவர்கள்) விழித்திருந்தார்கள். அப்போது “லா இலாஹ இல்லல்லாஹு என எவராவது ஒரு அடியான் கூறி, அதன்மீதே (அவர்) மரணித்தால் (அவர்) சுவனம் நுழைவார்.” எனக் கூறினார்கள். “(அவர்) விபச்சாரம் செய்து, திருடியபோதிலுமா?” என (நான்) கேட்டேன். (அதற்கு) “விபச்சாரம் செய்து, திருடினாலும் சரியே!” எனக் கூறினார்கள். “(அவர்) விபச்சாரம் செய்து, திருடியபோதிலுமா?” என (நான் மீண்டும்) கேட்டேன். “விபச்சாரம் செய்து, திருடினாலும் சரியே!” என (மீண்டும்) கூறினார்கள். “(அவர்) விபச்சாரம் செய்து, திருடியபோதிலுமா?” என (நான் மீண்டும்) கேட்டேன். “விபச்சாரம் செய்து, திருடினாலும் சரியே! அபூதருடைய மூக்கு உடைபட்டாலும் சரியே!” என (மீண்டும்) கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி. லிபாஸ் - 23)

விபச்சாரம் புரிதல், திருடுதல் போன்றவை பெரும் பாவங்களாகும். இருந்தாலும் அவற்றைச் செய்தவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் என்றோ ஒருநாள் சுவனம் நுழைவார்கள் என்பதை ரஸூலுல்லாஹி (ஸல்) தெளிவுபடுத்துகின்றார்கள். மேற்படி ஹதீஸின் மூலம் “பெரும்பாவம் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள்” எனும் வாதம் தவறு என்றாகிவிடுகின்றது. அந்தக் கருத்தை முன்வைத்தவர்கள் அலி (ரலி) அவர்களின் காலத்தில் ஜமாஅதுல் முஸ்லிமீனை விட்டும் பிரிந்து சென்ற ஹவாரிஜ்களாவர்.

குர்ஆன், ஸுன்னா ஒளியில் இணைவைத்தலைத் தவிரவுள்ள ஒரு சில பெரும்பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்ற அதேவேளை வேறு சில பெரும்பாவங்களை அவன் மன்னிப்பதில்லை. அவற்றைச் செய்வோர் நரகிலிருந்து வெளியேற்றப்படுவதும் இல்லை. இது பற்றி அல்லாஹ்வின் வேதம் என்ன கூறுகின்றது என்பதைப் பாருங்கள்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
எவரேனும் ஒரு விசுவாசியை யார் வேண்டுமென்றே கொலை செய்கின்றானோ அவனுக்குரிய கூலி நரகமாகும். அதிலே (அவன்) என்றென்றும் இருப்பான். அவன்மீது அல்லாஹ் கோபம் கொள்வதுடன், அவனை சபித்தும் விடுவான். (இதற்கும் மேலாக) அவனுக்கு மகத்தான வேதனையையும் (அவன்) சித்தப்படுத்தி வைத்துள்ளான். ( 0 4 : 9 3 )

ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-
முஸ்லிமைத் திட்டுவது கெட்ட செயலாகும். மேலும் அவனைக் கொலை செய்வது நிராகரிப்பாகும். (ஸ.முஸ்லிம் கி.ஈமான் - 28) பிற முஸ்லிமை வேண்டுமென்றே கொலை செய்பவன் நரகில் நிரந்தரமாகத் தங்கிவிடுவான் என்பதாக அல்லாஹ் எவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளான். இதனை உண்மைப்படுத்தி அவனது தூதராகிய ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முஸ்லிமைக் கொலை செய்வது நிராகரிப்பாகும் எனக் கூறியுள்ளார்கள்.

குர்ஆனும், ஹதீஸும் தெளிவாகவும் நேரடியாகவும் கூறுகின்ற உண்மைக்கு முரணாக ஜன்னத் வல் ஜமாஅத் எனக் கூறுவோர் பெரும்பாவங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றைச் செய்பவர் நரகத்தில் நிரந்தரமாகத் தங்குவதில்லை என்ற முடிவை மேற்கொண்டுள்ளனர். இவர்களது முடிவு முற்றிலும் தவறானது என்பதை நாம் மேலே தந்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு பெரும்பாவங்களில் நரகில் நிரந்தரமாக்கிவிடக் கூடியவைகளும், என்றோ ஒருநாள் சுவனம் செல்வதற்குத் தடையாக அமையாதவைகளும் என இரண்டு வகையாக இருப்பதனால் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கக்கூடியவர்களான நாம் “பெரும்பாவங்களில் எதனைச் செய்தாலும் அதனைச் செய்வோர் நரகில் நரந்தரமாக இருப்பார்கள்” என அன்றைய ஹவாரிஜ்கள் கூறியதை சரிகாணவும் இல்லை. “இணைவைக்காதவர்கள் பெரும்பாவங்களைச் செய்துவிட்டு பாவமன்னிப்புத் தேடாவிட்டாலும் அவர்கள் நரகில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள்” எனும் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் கூற்றை சரிகாணவும் இல்லை.

அல்லாஹ்வும் அவனது தூதரும் என்னென்ன பாவங்கள் அடியார்களை நரகில் நிரந்தரமாக்கிவிடும் என்பதாகக் கூறியுள்ளனரோ அவை அடியார்களை நரகில் நிரந்தரமாக்கிவிடும் என்பதாகக் கூறுகின்றோம். குப்ர், ஷpர்க் அல்லாத பெரும்பாவங்களில் நரகில் நிரந்ரமாக்கக் கூடியது என்பதாக எவை பற்றிக் கூறப்படவில்லையோ அவற்றில் எதனைச் செய்தாலும் அதன் மூலம் எவரும் நரகில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள் எனக் கூறுகின்றோம்.

பெரும்பாவங்களில் சில இணைவைக்காதவர்களையும் நரகில் நிரந்தரமாகத் தங்கவைத்துவிடும் என்பதாக அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறுகின்ற உண்மையை நாம் எடுத்துக்கூறும்போது எம்மீது சேறு பூச விரும்பும் ஒரு சிலர் எம்மை ஹவாரிஜ்கள் எனக் கூறி விடுகின்றனர். என்ன பெரும்பாவத்தைச் செய்தாலும் அவன் நிரந்தரநரகவாதி என முஸ்லிம்களுக்குத் தீர்ப்பு வழங்கிய ஹவாரிஜ்களுடன் அல்லாஹ்வின் தீர்ப்பை மாத்திரம் எத்திவைக்கும் ஜமாஅதுல் முஸ்லிமீனை சேர்த்துக் கூறுவது அல்லாஹ்வின் தீனுக்கு செய்யும் துரோகமாகும். உண்மையைத் தெரிந்துகொண்டே எவராவது அவ்வாறு செய்தால் அதன் பிரதிபலனை மறுமையில் நிச்சயமாக அவர்கள் சுகிக்கத்தான் போகின்றார்கள்.

ஆகவே ஜமாஅதுல் முஸ்லிமீன் மீது ஹவாரிஜ் பட்டம் சுமத்துவோர் அவர்களது கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அதற்குரிய தெளிவான ஆதாரத்தை அவர்கள் முன்வைக்க வேண்டும். அல்லாஹ்வின் உதவியால் மறுமைநாள் வரை அவர்களால் அது சாத்தியப்படப் போவதில்லை. எனவே அத்தகையவர்கள் தெளிவின்றி சத்தியப் பிரச்சாரத்தில் குறுக்கே நிற்காமல் அவர்களும் சத்தியத்தை ஏற்று, சுவனம் செல்லும் ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீனில் இணைந்துகொள்ளுமாறு அவர்களை நாம் அழைக்கின்றோம்.